Headlines

இன்னும் பல உள்ளூராட்சி சபைகளை அமைக்குமாறு ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை




சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்திற்கும் எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு வந்திடாத வகையில் கருமங்களை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டினார். குறிப்பாக மருதமுனைக்கென தனியான சபையொன்றையும் கல்முனையில் தமிழ் மக்கள் அதிகமாக வாழுமிடங்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கான ஒரு சபையொன்றினையும் உருவாக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை அதிகளவு சனத்தொகையையும் பரப்பளவையும் கொண்ட சபையாகும். எனவே அந்தப் பிரதேச சபையை புதுக்குடியிருப்புப் பிரதேச சபை, ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை என இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளை ஏற்படுத்திதருமாறும் வேண்டினார்.

அதே போன்று மன்னாரில் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட மாந்தை மேற்கு சபையைப் பிரித்து அங்கு இன்னுமொரு பிரதேச சபையாக மடுப்பிரதேச சபையை உருவக்குமாறும், முசலிப் பிரதேச சபையின் எல்லையில் இருக்கும் மறிச்சுக்கட்டியை பிரதேச சபையாக உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் சிலாவத்துறையையும் அவை சார்ந்துள்ள இடங்களையும் உள்ளடக்கி சிலாவத்துறை நகரசபையாகவும் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

திருமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபை, சாம்பூர், தோப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பெரிய பிரதேச சபையாகும். எனவே அங்கு தமிழ் மக்களுக்கென தனியான ஒரு சபையையும் தோப்பூர் மக்களுக்கு ஒரு பிரதேச சபையும்யையும் மூதூரை நகர சபையாகவும் ஆக்க வேண்டும் என்றார்.

குச்சவெளி பிரதேச சபையும் பாரிய நிலப்பரப்பை கொண்டதாக உள்ளது. புல்மோட்டையையும் இந்தப் பிரதேச சபை தன்னகத்தே கொண்டுள்ளதால் அதனையும் இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

அத்துடன் புத்தளம் மன்னார் வவுனியா ஆகிய நகர சபைகளை மாநகரசபையாக பிரகடனப் படுத்துமாறும் சம்மாந்துறைப் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுமாறும் அமைச்சர் வேண்டிக்கொண்டார்.

அது மாத்திரமன்றி கற்பிட்டி பிரதேச சபையை கற்பிட்டி நகர சபையாக மாற்றி அந்தப்பிரதேசத்திலுள்ள காயாமோட்டையை பிரதேச சபையாக மாற்றுமாறும் கோரினார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா வடக்குக் கிழக்கில் பாலங்கள் நிர்மாணிப்பதற்கு உதவியமைக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *