Headlines

மட்டக்களப்பில் ரயில் விபத்து




மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விபத்து இடம்பெற்றது.
குறித்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் 6.15 மணிக்கு புறப்படும் கொழும்பு, கோட்டை நோக்கிப் புறப்படும் உதயதேவி ரயிலே விபத்துக்குள்ளானது. குறித்த ரயில்  புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில், ரயில் இஞ்சின் மோதியதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம நிலைய அதிபர் எம்.பி.கபூர் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த இஞ்சின்; தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டதுடன்,  ரயில் பெட்டி ஒன்றும் ரயில் கடவையும்  சேதமடைந்துள்ளன.

இதன்போது, பயணிகள் எவருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த விபத்தை அடுத்து, காலை 6.15 மணிக்குப் புறப்படும் உதயதேவி ரயிலானது ஒரு பெட்டியைக்  குறைத்துக்கொண்டு தனது பயணத்தை மேற்கொண்டது.

மேலும், முற்பகல் 10.25 மணிக்கு பொலன்னறுவை நோக்கிச் செல்லும் ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *