Headlines

இந்தியா – இலங்கைக்கு இடையில் பாலம் என்பது பொய்ப் பிரச்சாரமாகும்




இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நேற்று முந்தினம் (10) பிற்பகல் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரவித்தார்.

கனேலந்தை ரஜமகா விகாரையின் அதிபதி சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ தம்ம தஸ்ஸி தேரரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு விகாரையில் புத்தர் சிலையை சூழ புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க வேலியை திறந்து வைத்தல், விகாரை வளாகத்தில் மின் ஒளி முறைமையை திறந்து வைத்தல் ஆகிய நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

தென்னிந்தியாவில் நடைபெற்ற ஒரு மாநிலத் தேர்தலின் போது ஒரு தென்னிந்திய அரசியல்வாதி தனது தேர்தல் பிரசாரத்திற்காகவும், இந்திய லோக்சபாவில் ஒரு தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்வைத்த இந்தக் கூற்றில் எவ்வித உண்மைகளும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகைய கூற்றுக்களினால் எமது நாட்டு மக்களை பிழையாக வழிநடாத்த சிலர் முற்படுவதாகவும் தெரிவித்தார்.

அரசியல் அமைப்பில் உள்ள பௌத்த சமயம் தொடர்பான பகுதியை நீக்கிவிட்டு இந்நாட்டை ஒரு மதசார்பற்ற நாடாக அரசியல் யாப்பில் உள்ளடக்க புதிய அரசாங்கம் முயற்சித்து வருவதாக குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட அடிப்படைவாதிகள் கொண்டு செல்லும் போலியான பிரசாரங்களையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்தியின் போதும் சர்வதேச ரீதியாகவும் எமக்கு உலகிற்கு வழங்கக்கூடிய உன்னத பங்களிப்பு பௌத்தத் தத்துவமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக தேரவாத பௌத்த சமயத்தை பிரசாரம் செய்யும் மத்திய நிலையமாக இலங்கையை மாற்றி உயர் தொழிநுட்ப உலகுடனும் வர்த்தக சமூகத்துடனும் பின்னடைந்து செல்லும் சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வருட சர்வதேச வெசாக் பண்டிகையை இலங்கையில் மிக விமரிசையாகக் கொண்டாட மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் தலைவர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், நிகழ்வின் பிரதான அனுசாசன உரையை நிகழ்த்தியதோடு, மகாசங்கத்தினர் உட்பட அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *