Headlines

பொது தேர்தலின் பின்னர் ஐ.தே.க. நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மிளிரும்: பிரதமர் ரணில்




பி. முஹாஜிரீன்

‘எதிர் வரும் பொது தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக மிளிரும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகவின் அழைப்பின் பெயரில் (05) ஞாயிற்றுக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்த பிரதம ரணில் விக்ரமசிங்க அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வை அடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

பிரதம ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை மேலோங்க செய்ய வேண்டும் அந்த வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நாங்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக வேண்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி ஆக்கியதில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் படி 100 நாள் வேலை திட்டத்தில் அத்தியவசியப் பொருட்கள், எரிபொருள் என்பவற்றின் விலைக் குறைப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பவற்றையும் வழங்கியுள்ளோம்.

1977 ம் ஆண்டு காலப்பகுதியில் திறந்த பொருளாதார முறையை நாட்டிற்கு கொண்டு வந்த நாம் ஆறு மாத காலத்திற்குள் நிறைவேற்று முறையையும் கொண்டு வந்தோம். அதேபோன்றே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் குறுகிய காலத்திற்குள் இல்லாமல் செய்வோம்’ எனவும் கூறினார்.

DSC08406இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அனோமா கமகே, முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன, முன்னாள் (எஸ்.எஸ்.பி) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. அப்துல் மஜீத், அரசாங்க அதிபர் பி. வணிகசிங்க உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்த கொண்டனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன உரையாற்றிக் கொண்டிருந்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் கூக்குரலிட்டமையால் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன உரையாற்றுவதற்காக எழுந்து சென்ற போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஒருவர் அவரைப் பார்த்து நகைப்புக்கிடமான முறையில் சத்தமிட்டார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர், அந்த ஐ.தே.க. அமைப்பாளரை கடுமையாக சாடிப்பேசியதுடன் ஐ.தே.க.வின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவன் நான், என்னை எவரும் பேசமுடியாது என்று கடும் வார்த்தை பிரயோகங்களால் கடிந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, அம்பாறை மாவட்டத்தின் மற்றுமொரு பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் அவரை பேசவிடாமல் தடுத்தனர். இதன் போது கூட்டத்தில் பெரும் பதட்டமான நிலையேற்பட்டதுடன் சிறிது நேரத்தில் முன்னாள் அமைச்சர் தமது உரையை முடித்துக் கொண்டு அவரது இடத்தில் அமர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *