Headlines

இழுபறி நிலையிலிருந்த ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகள் நாளை




கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நேட்டோ துருப்புகளின் பாதுகாப்புடன் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதன் முதல் சுற்று முடிவின்போது அப்துல்லா அப்துல்லா முன்னணியில் இருந்ததாக அறிவிக்கப்பட்டார்.இரண்டாவது சுற்று எண்ணிக்கை முடிவடைந்து ஜூன் மாதம் வெளிவந்த அறிவிப்பில் மற்றொரு வேட்பாளரான அஷ்ரப்கனி அகமதுசாய் முன்னணியில் இருந்தார். இதனை ஏற்றுக்கொள்ள அப்துல்லா மறுக்கவே முடிவுகளை வெளியிட முடியாமல் அங்கு குழப்பமான சூழ்நிலை எழுந்தது.அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரி தொலைபேசி மூலம் இந்த விவகாரத்தில் சமரசம் செய்ய முயற்சி செய்த போதிலும் வாரக்கணக்கில் பிரச்சினை இழுத்தடித்தது. நீண்ட நாட்களாக இழுபறி ஏற்பட்டதால் தேர்தல் கமிஷன், தேர்தல் முடிவை வெளியிட முடியாமல் இருந்து வந்தது.எனவே, மோசடி வாக்குகளை தணிக்கை செய்து அதன்பின்னர் தேர்தல் முடிவை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிந்துள்ள நிலையில் நாளை ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக இருக்கிறது என்று தேர்தல் கமிஷன் செய்தி தொடர்பாளர் நூர் முகமது நூர் கூறியுள்ளார்.அப்துல்லா அப்துல்லா மற்றும் அஷ்ரப்கனி அகமதுசாய் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் அதிகாரத்தை இருவரும் பகிர்ந்து கொள்வது என்று ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி அதிபரும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாகி அலுவலகமும் பொறுப்புகளை பிரித்துக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *