Headlines

சர்வதிகார அரசுக்கெதிராக வாக்களித்த மக்ளுக்கு நன்றிகள்




எஸ்.அஸ்ரப்கான்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை இனவாதத்தின் கோரப்பிடிக்குள் தள்ளி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடாத்திய அரசைத் துாக்கி வீசுவதற்காக ஒன்றுபட்டு வாக்களித்த முஸ்லிம், தமிழ் சிறுபான்மை சமூகங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காய் ஒன்றுபட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு நன்றி தெரிவித்து கட்சி சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரலாற்றில முதல் தடவையாக ஒரு ஆட்சியாளரைத் தெரிவு செய்வதற்கு சிறுபான்மை மக்கள் 95 வீதத்திற்கு மேல் ஒன்றுபட்டு பெரும்பான்மை சமூகத்தில் சமாதானத்தையும், ஒற்றுமையையும் விரும்புகின்ற சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்து மைத்திரிபால சிறிசேன அவர்களை அரியாசனத்தில் அமர்த்தியிருக்கின்றார்கள். என்பதை மான்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எந்நேரமும் மனதில் இருத்தி செயற்படுவார் என்ற நம்பிக்கையோடு இம்மக்களின் சார்பாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் புதிய ஜனாதிபதியினை மனதார வாழ்த்துகின்றோம்.

கடந்த இரண்டு வருடங்கள் சிறுபான்மை சமூகங்கள் பொதுவாகவும், முஸ்லிம் சமூகம் குறிப்பாகவும் இனவாதிகள் தொடுத்த தாக்குதல்களினால் ஏற்பட்ட பெரும் மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார்கள்.

இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த ஆட்சி மாற்றம் இம்மக்களின் மனங்களில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிம்மதி நிரந்தரமாகத் தொடர்வதற்கு புதிய ஆட்சி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரம் ஒரு ஆட்சியைத் துாக்கி வீசுகின்ற சந்தர்ப்பம் சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்ததற்கான காரணம், ஜனாதிபதி ஆட்சி முறையாகும். பொது எதிரணி இந்த ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கான உடன்படிக்கையோடுதான் களமிறங்கியது என்பதனை பூரணமாகத் தெரிந்துகொண்டு, மறுவார்த்தையில் சொன்னால் இவ்வாறு சிறபான்மைகளுக்கு இருக்கின்ற சந்தர்ப்பத்தை இந்தத் தேர்தலோடு பொது எதிரணி இல்லாமலாக்கப்போகின்றது என்பதை அறிந்து கொண்டுதான் சிறுபான்மை சமூகங்கள் பொது எதிரணிக்கு வாக்களித்திருக்கின்றன.

அதன் பொருள் பொது எதிரணியின் நிலைப்பாட்டில் சிறுபான்மை சமூகங்கள் உடன்பட்டிருக்கின்றன என்பதல்ல. மாறாக இனக்கலவரத்தைத் துாண்டி சிறுபான்மைகளின் வாழ்வை நாளாந்தம் வேதனையாக்கிய ஒரு ஆட்சியாளனை துாக்கி வீச வேண்டும் என்கின்ற அவசரத் தேவையும், மறுபுறத்தில் என்ன மாற்றங்கள் கொண்டுவந்தாலும் பொது எதிரணி தமக்கு வாக்களித்த சிறுபான்மையின் நலன்களை கருத்தில் கொண்டே செயற்படும் என்ற நம்பிக்கையினாலுமாகும்.

எனவே, பொது எதிரணி ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு தொடர்பாக முடியுமானால் மீள் பரிசீலனை செய்து ஜனாதிபதியின் தேவையற்ற அதிகாரங்களை நீக்கி ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்வது தொடர்பாக சிந்திக்க வேண்டும். அல்லது அம்முறை ஒழிக்கப்படத்தான் வேண்டுமென்றால் பொதுத் தேர்தல் முறைச் சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பெறப்படுவதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் மத்திய அரசாங்கத்தில் சிறுபான்மைகள் பார்வையாளர்களாக பங்கு பெறாமல் பங்குதாரர்களாக இடம்பெறக்கூடிய (mandatory stakeholder ship) தேர்தல் முறையாக அது அமைவதை உறுதிப்படுத்த வேண்டும்.

புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும் மீண்டும் வாழ்த்துகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *