Headlines

மைத்திரியின் சின்னம் ‘அன்னம்’: மக்களை அவதானமாக இருக்குமாறு மனோ கணேசன் கோரிக்கை!




பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் சின்னம் அன்னப்பறவையாகும். அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்குக் கண்ணாடி அணிவித்து, பவுடர் பூசி, அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, அப்பாவி தமிழ் மக்களை குறி வைத்து ஏமாற்றும் ஒரு வேலையை மஹிந்த அரசின் முகவர்கள் சிலர் செய்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப் பிரிவினூடு மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆர்.ஏ. சிறிசேன என்ற வேட்பாளரின் சின்னம், கொடிச் சின்னமாகும். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னம், அன்னப்பறவை சின்னமாகும்.

ஊடகங்களில் விளம்பரம் செய்து மக்களை குழப்ப முயலும் அரசாங்கம் இன்னொன்றையும் செய்கிறது. மாதிரி வாக்குச்சீட்டு ஒன்றை அச்சடித்து தமிழ் மக்கள் மத்தியில் விநியோகம் செய்துள்ளது. இந்த மாதிரி வாக்குச்சீட்டில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னமாக, கொடி சின்னம் காட்டப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மக்களை குழப்பும் ஒரு வெட்கங்கெட்ட மோசடி நடவடிக்கையாகும்.

இத்தகையை வாக்குசீட்டு குறிப்பாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தோல்வியின் விளிம்பில் நின்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ச அணி செய்யும் இந்த மோசடி வேலையை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

வாக்குசீட்டில், எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் தமிழ், சிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது பெயருக்கு இடதுபுறம் அவரது சின்னமான, அன்னப்பறவை அச்சிடப்பட்டிருக்கும். ஒட்டு மொத்த பத்தொன்பது வேட்பாளர்களின் பெயர் வரிசையில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர், பத்தாவதாக இடம்பெற்றுள்ளது.

இவை பற்றிய இந்த உண்மை தகவல்களை விஷயம் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் தங்கள் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, ஊரவர்களுக்கு நேரடியாகவோ, தொலைபேசி மூமாகவோ எடுத்துகூறி தெளிவு படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *